சென்னை பனையூரில் உள்ள விஜய்யின் வீட்டில் நேற்று மாலை 5 மணியளவுக்கு வந்த வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
பிறகு நெய்வேலியில் இருந்து அழைத்து வரப்பட்ட விஜய்யிடமும் அவரது வீட்டில் வைத்து இரவு 9 மணியளவில் வருமான வரித்துறையினர் 10 பேர் விசாரணை நடத்தினர். அப்போது பிகில் படத்தின் சம்பளம் தொடர்பாக கிடைத்த ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பிறகு 7 பேர் புறப்பட்டுச் சென்ற நிலையில், பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேர் மட்டும் விஜய்யிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இன்று காலை மேலும் 6 அதிகாரிகள் விஜய் வீட்டுக்கு வந்தனர். அவர்களும் ஏற்கெனவே இருந்த 3 அதிகாரிகளுடன் சேர்ந்து, விஜய்யிடம் விசாரணையை தொடர்ந்தனர். பிறகு மதிய நேரத்தில் வருமான வரித்துறையினர் 4 பேர் விஜய் வீட்டில் இருந்து புறப்பட்டனர்.
இதனால் 5 பேர் தொடர்ந்து விஜய்யிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று தொடங்கிய விசாரணை 20 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
காலை பத்து மணி அளவில் ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு விஜய் வீட்டிற்கு வந்து டெலிவரி செய்யப்பட்டது. இதேபோல் வருமான வரித்துறையினருக்கு அதிகாரிகள் உணவை வாங்கி சென்றனர்.
பிறகு விஜய்யிடமும், அவரது மனைவியிடமும் வருமான வரித்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்தனர். அப்போது விஜய், பிகில் படத்துக்கு சம்பளமாக 30 கோடி ரூபாய் பெற்றதாக அதிகாரிகளிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விஜய் வீட்டில் பணமோ, சொத்து ஆவணமோ பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை.
இதனிடையே வரி ஏய்ப்பு தொடர்பாக கிடைத்த தகவலின்பேரில், ஏஜிஎஸ் நிறுவன அலுவலகங்கள், திரையரங்குகள், ஏஜிஎஸ் உரிமையாளர் கல்பாத்தி அகோரத்தின் வீடு உள்ளிட்ட இடங்கள், பிகில் படத்தை விநியோகம் செய்த பைனான்சியர் அன்புச்செழியன், அவரது நண்பரும் நகைக்கடை அதிபருமான சரவணன் ஆகியோருக்கு சொந்தமான சென்னை மற்றும் மதுரையிலுள்ள வீடு, அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் 2வது நாளாக சோதனை நடத்தினர்.
மதுரையிலுள்ள சரவணனின் வீட்டில் இருந்து 13 பெட்டிகளில் கட்டுக்கட்டாக ரொக்க பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.